ஒரு சிறிய ராணுவ வீரனாக செயல்படுவேன்: ஹர்திக் பட்டேல்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தேசத்தின் உன்னத பணிக்கு ஒரு சிறிய ராணுவ வீரனாக செயல்படுவேன் என ஹர்திக் பட்டேல் தெரிவித்து உள்ளார்.

குஜராத் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் கடந்த 19ந்தேதி அக்கட்சியில் இருந்து விலகும் முடிவை வெளியிட்டார். கட்சி தலைமை தன்னை ஓரங்கட்டுகிறது என்றும், தன்னை வெளியேற்ற முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். அதற்கு முன்பு, தன் பெயருடன் இருந்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் என்ற தலைப்பை டுவிட்டரில் இருந்து நீக்கினார். காங்கிரசில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதம் ஒன்றை கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார். தொடர்ந்து அவர், காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்றும், கட்சியின் தலைவர்கள் அதானி, அம்பானி போன்ற குஜராத் மக்களுக்கு எதிராக உள்ளார்கள் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சியில் சாதி அரசியல் அதிகம் உள்ளது எனவும், இந்த கட்சியில் 3 ஆண்டுகள் வீணடித்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளார். குஜராத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக நான் பணிபுரிவேன் என்று குறிப்பிட்டு இருந்த ஹர்திக் படேல், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றும் கூறினார். இதனால், அவர் பா.ஜ.க.வில் இணையலாம் என்று பரவலாக பேச்சுகள் எழுந்தன.

இந்த நிலையில், ஹர்திக் படேல் இதனை உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தேசிய, மாநில, பொதுமக்கள் மற்றும் சமூகம் சார்ந்த நலன்களுக்காக நான் இன்றில் இருந்து ஒரு புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறேன். இந்தியாவின் வெற்றிகர பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தேசத்தின் உன்னத பணிக்கு ஒரு சிறிய ராணுவ வீரனாக செயல்படுவேன் என தெரிவித்து உள்ளார். பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரியது உள்ளிட்ட பல்வேறு நலன்களுக்காக போராடி வந்த ஹர்திக் பட்டேலுக்கு எதிராக குஜராத் முதல்-மந்திரி ஆனந்தி பட்டேல் தலைமையிலான அரசு பல வழக்குகளை போட்டது. எனினும், 2016ம் ஆண்டில் ஆனந்திபென் பட்டேல் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து, 2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரசில் இணைந்த ஹர்திக் பட்டேல், 3 ஆண்டுகளுக்கு பின்பு அக்கட்சியில் இருந்து விலகுகிறார். குஜராத் சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சூழலில், பா.ஜ.க.வில் இன்று அவர் இணைகிறார்.