பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதியில் கத்தியுடன் வந்த பெண்ணை இஸ்ரேல் ராணுவ வீரர் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. சமீபத்தில் ‘அல் ஜசீரா டிவி’யின், பாலஸ்தீன பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லெ சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இரு தரப்பிலும் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனியர்களின் தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில், பாலஸ்தீனியத்தைச் சேர்ந்த, 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறை தொடர்பாக, மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தினமும் அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரரை நோக்கி ஒரு பெண் கத்தியுடன் பாய்ந்துள்ளார். இதைப் பார்த்த ராணுவ வீரர் அந்த பெண்ணை சுட்டுக் கொலை செய்துள்ளார். விசாரணையில் அந்த பெண், அகதிகள் முகாமைச் சேர்ந்த, கப்ரன் வரஸ்னா என்பது தெரியவந்துள்ளது. இஸ்ரேல் சிறையில் மூன்று மாதங்கள் இருந்த அவர் சமீபத்தில் தான் விடுதலையானார் என, பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.