ஆரணியில் “தந்தூரி சிக்கன்” சாப்பிட்ட மாணவர் பலி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12-ஆம் வகுப்பு மாணவன் திருமுருகன் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழந்தாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த மாதம் கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வுகளில் ஈடுபட்டனர். மேலும், ஷவர்மா தயாரிப்பது குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். தனியார் பள்ளி ஒன்றில் தாளாளராக இருக்கிறார், இவரது மகன் திருமுருகன். இவர் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து ஆரணி காந்தி நகர் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தந்தூரி சிக்கன் மற்றும் ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டுள்ளார் திருமுருகன். பின்னர் வீட்டிற்கு சென்ற திருமுருகனுக்கு இரவு முழுவதும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவரை அவரது பெற்றோர் அருகே இருந்த மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அடுத்த நாள் மாணவர் திருமுருகனுக்கு திடீரென வயிற்றுப்போக்கு அதிகம் ஏற்பட்டதையடுத்து அவரை வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே திருமுருகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து மாணவர் திருமுருகனின் தந்தை கணேஷ், தனது மகன் இறப்புக்கு காரணமான உணவக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரணி நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ஆரணியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சிறுமி ஒருவர் பலியான நிலையில் தற்போது மீண்டும் மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.