சிஏஏவை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம்: பினராயி விஜயன்

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தனது அரசு அமல்படுத்தாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.

கேரள மாநில முதலமைச்சராக 2 வது முறை பினராயி விஜயன் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது:-

நமது நாடு மதசார்பின்மை என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்படுவதாக அரசியலமைப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தற்போது மதசார்பின்மையை தகர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மக்கள் இதனால் பெரும் கவலை அடைந்து இருக்கின்றனர். சமீபத்தில் மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை நிர்ணயம் செய்கின்றனர். கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அதை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே மத பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இங்கு சமுதாயத்தில் மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களை கண்டறிய கணக்கெடுப்பை நடத்தினோம். இந்த கணக்கெடுப்பு தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம். கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசு அமல்படுத்தாது. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை நமது அரசு உறுதியாக எதிர்க்கிறது.