முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கைகோள் போன்!

முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கை கோள் செல்போன்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணை அடர்ந்த பெரியாறு வன புலிகள் சரணலாயத்தின் நடுவில் அமைந்துள்ளது. இங்கு தரைவழி தொலைபேசி இணைப்பு இல்லை. மேலும், வெள்ள காலங்களிலும், பருவமழை காலங்களிலும் மழை மேகங்களின் இடர்பாடுகளினால் அலைபேசி தொடர்பும் சரியாக கிடைக்கப்பெறாமல், தொடர்பு துண்டிக்கப்பட்டு அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம், மழையளவு போன்ற விபரங்களை உயர் அலுவலர்களுக்கும், தொடர்புடைய மாவட்ட கலெக்டருக்கும், பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து தக்க ஆலோசனைகள் பெற்று வெள்ள மேலாண்மை மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது.

மேலும், முல்லை பெரியாறு பிரதான அணைக்கு படகில் 14 கீ.மீ தூரம் பயணம் செய்யும் போது ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்லும் போது அலைபேசி தொடர்பு கிடைப்பதில்லை. பாதுகாப்பு நோக்கில் தகவல் தொடர்பு சேவை மிகவும் இன்றியமையாதது ஆகும்.

நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஆகியோர் 5.11.2021 அன்று பெரியாறு அணையை பார்வையிட்டு வெள்ள மேலாண்மை பற்றி கேட்டறிந்த போது, மேற்கண்ட சிரமங்களை களையும் பொருட்டு செயற்கைகோள் அலைபேசி வழங்கிட முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 6 எண்ணிக்கையிலான செயற்கைகோள் அலைபேசிகள் மற்றும் ஒரு வருட சேவைக் கட்டணம் ஆகியவற்றிற்காக ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முல்லைப் பெரியாறு அணையில் பணிபுரியும் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், பெரியாறு அணை முகாம் மற்றும் தேக்கடி முகாம் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக செயற்கைகோள் அலைபேசிகளை வழங்கினார்.

இவ்வலைபேசிகள் வாயிலாக செயற்கைக்கோள் கோபுர சேவை இணைப்பு ஏதும் இல்லாமலேயே அடர்ந்த காட்டுப் பகுதியில் சேவை பெற இயலும். இதன்மூலம், பெரியாறு அணை மற்றும் பெரியாறு அணைக்குரிய படகு பயணிக்கும் பாதையில் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் எந்த நேரமும், எல்லா கால சூழ்நிலையிலும் உயர் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்க இயலும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.