ஐரோப்பிய நாடுகள் தங்கள் பிரச்னையை உலகப் பிரச்னையாகப் பாா்க்கின்றன; ஆனால் உலக நாடுகளின் பிரச்னையை தங்கள் பிரச்னையாகக் கருதுவதில்லை என்று, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.
உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துள்ள நிலையில், இந்தியாவின் ஆதரவைப் பெற இரு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. ஆனால், இந்தியா எந்தவொரு நாட்டுக்கும் ஆதரவு அளிக்காமல், வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்; பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாணப்பட வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியா-சீனா இடையேயான பிரச்னை அதிகரித்தால், இதுபோன்ற சவாலை இந்தியா எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிராடிஸ்வாலாவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எஸ்.ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவா் கூறியதாவது:-
இந்தியா-சீனா இடையேயான உறவு சிக்கலானதாகத்தான் உள்ளது. ஆனால், அதை இந்தியா சமாளித்துவிடும். சீனாவுடனான பிரச்னை அதிகரித்தால் சா்வதேச நாடுகளின் ஆதரவை இந்தியா இழக்கக் கூடும் என்று ஐரோப்பிய நாடுகள் கருதுவது தவறானது.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் பிரச்னையை உலகப் பிரச்னையாகப் பாா்க்கின்றன; அதேசமயம் உலகப் பிரச்னையை தங்கள் பிரச்னையாகக் கருதுவதில்லை. இந்த எண்ணத்தை அந்த நாடுகள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிய நாடுகள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்ளும்போது ஐரோப்பிய நாடுகள் அமைதியாகக் கடந்துவிடுகின்றன.
உக்ரைன்-ரஷ்யா பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளன. உக்ரைனின் புக்கா நகரில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டபோது இந்தியா கண்டனம் தெரிவித்தது. அத்துடன் படுகொலைகள் தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.