மதம் மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு: டெல்லி உயர்நீதிமன்றம்

தனிநபர் ஒருவர் தான் விரும்பிய எந்தவொரு மதத்திற்கும் மாறுவதற்கு அரசியலமைப்பில் உரிமை உள்ளது என்பதால், எந்தவொரு மதத்தையும் பின்பற்ற அல்லது எந்த மதத்தையும் தேர்ந்தெடுப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்று டெல்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.

பரிசுப்பொருள்கள் மற்றும் பணம் கொடுத்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்ககோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. பாஜகவைச் சேர்ந்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாயா இந்த வழக்கை தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தனிநபர் ஒருவர் தான் எந்த மதத்தையும் பின்பற்றவோ அல்லது தேர்ந்தெடுக்கவோ உரிமை உள்ளது. மதமாற்றம் அரசியல் சாசன உரிமை என்பதால் அதைத் தடை செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. “ஒவ்வொரு மதத்திற்கும் அதன் மீதான நம்பிக்கைகள் உள்ளன. யாரையாவது கட்டாயப்படுத்தி மதம் மாற்றினால், அது வேறு, ஆனால் மதம் மாறுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதாவது, தனிநபர் ஒருவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு. ஒருவர் விரும்பும் மதத்துக்கு மாறுவதற்கு சட்டப்படி உரிமை உண்டு. மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை. இதுதொடர்பான புகாரை விசாரிக்க மனுவில் குறிப்பிட்டுள்ளதுபோல கட்டாய மதமாற்றம் நடப்பதற்கான தரவுகள் எங்கே எனக் கேள்வியெழுப்பியது.

சமூக ஊடகங்களில் வரும் தகவலை ஆதாரமாகக் கொண்டு கட்டாய மதமாற்ற புகாரை விசாரிக்க முடியாது. சமூக ஊடகங்களில் வரும் தரவுகள் மார்பிங் செய்யப்படலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

செய்தித்தாள், வாட்ஸ் ஆப், சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் அடிப்படையில் பொது நல மனுவை தாக்கல் செய்யக்கூடாது. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவதாக இருந்தாலும்கூட மனுவில் போதிய ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 25 ஆம் தேதி ஒத்திவைத்த நீதிமன்றம், கணிசமான தரவுகளை பதிவு செய்யுமாறு மனுதாரரின் வழக்குரைஞரை கேட்டுக் கொண்டது.