மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளை ஏற்கும் நிலை விரைவில் வரும்: சேகர்பாபு

மதுரை ஆதீனம் தமிழக அரசையும் அரசியல்வாதிகளையும் ஏற்கும் நிலை விரைவில் வரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும், தனக்கான செய்திகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார். அவர் ஒருவர் மட்டுமே அவ்வாறு பேசி வருகிறாரே தவிர மற்றவர்கள் பேசவில்லை. இன்றைக்கு எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும் நமது தீட்சிதர்கள் நம்முடன் தான் இருக்கின்றனர். ஒருவர் பேசியதற்காக மற்றவர்களையும் சேர்த்து குறைக்கூற கூடாது. நேற்று முன்தினம் கூட தருமபுர ஆதீனத்திற்கு சென்றேன். அவர் நல்ல முறையிலே எங்களை வரவேற்றார். ஆன்மிகவாதிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கம்தான் இருக்கிறார்கள். ஆத்திகர்கள், நாத்திகர்கள் என அனைவருக்குமான ஆட்சியே திராவிட மாடல் ஆகும். மதுரை ஆதீனம் தமிழக அரசையும் அரசியல்வாதிகளையும் ஏற்கும் நிலை விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் விஷ்வஇந்துபாிஷித் சாா்பில் துறவிகள் மாநாடு நடைபெற்றது. இதில் திருப்போரூா், மதுரை,தருமபுரம் உள்ளிட்ட ஆதீனங்கள் கலந்து கொண்டு உரையாற்றினா். அப்போது பேசிய மதுரை ஆதீனம், ஆதீனங்கள் அரசியல் பேசாமல் வேறு யாா் பேசுவது என்றும் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? என்றும் கேள்வி எழுப்பினாா். இலங்கையில் கோவில்களை இடித்ததால் ராஜபக்சே இருக்கும் இடம் தொியவில்லை. தமிழகத்திலும் கோவில்கள் இடிக்கப்படுகின்றன. எனவே, கோவில்களில் கையை வைக்காதீா்கள் என் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என அவா் பேசினாா்.