கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து குடியரசு தலைவர், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், கடலூரில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் தற்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதாவது, கடலூர் கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்ததற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். நெஞ்சை உலுக்கும் விபத்து என்றும் தன்னை மிகுந்த அதிர்ச்சியடைய செய்ததாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கடலூர் அருகே கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த மோனிசா, சங்கவி, சுமிதா, காவியா, பிரியதர்ஷிணி, நவநீதம் மற்றும் பிரியா, ஆகிய 7 பேர் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்துள்ள 5லட்சம் நிதியை 10லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கல் செய்தியில், “கடலூர் மாவட்டம் அருங்குணம் கெடிலம் ஆற்று மணலில் சிக்கி உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் குளித்த பகுதி பள்ளமாக இருப்பதால் அத்துமீறி மணல் ஏதேனும் சுரண்டப்பட்டுள்ளதா என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
