காஷ்மீர் பண்டிட்டுகள் தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது: உத்தவ் தாக்கரே

காஷ்மீரில் பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவம் குறித்து மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேதனை தெரிவித்து உள்ளார்.

காஷ்மீரில் பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் காஷ்மீரில் இந்துக்கள், பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவம் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேதனை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காஷ்மீர் பண்டிட்டுகள் அவர்களின் பள்ளத்தாக்கிற்கு மீண்டும் திரும்புவது கனவாக உள்ளது. ஆனால் அவர்கள் குறி வைத்து கொல்லப்படுகின்றனர். பண்டிட்டுகளின் வெளியேற்றம் அதிர்ச்சி அளிக்கிறது. காஷ்மீர் பண்டிட் தலைவர்களுடன் அரசு தொடர்பில் உள்ளது. பண்டித் சமூகத்திற்கு ஆதரவாக அவர்களுக்கு பின்னால் மகாராஷ்டிரா இருக்கும். அவர்களின் பாதுகாப்புக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், மகாராஷ்டிரத்தில் சிவசேனை மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் ஆட்சியை பகிா்ந்து கொண்டிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் மகேஷ் தபாஸே கூறியதாவது:-

இடம்பெயா்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மகாராஷ்டிரம் மட்டுமே பாதுகாப்பான மாற்று இடத்தை வழங்கியது. ஆனால், பாஜக அவா்களின் உணா்வுகளுடன் விளையாடி வருகிறது. அரசியல் காரணங்களுக்காக ‘தி காஷ்மீரி ஃபைல்ஸ்’ திரைப்படத்தை ஊக்குவிப்பதிலேயே பாஜக தலைவா்கள் மும்மரமாக உள்ளனா்.

நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களின் உயிா்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு உள்ளது. ஆனால், காஷ்மீரில் ஹிந்துக்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்டுகளின் உயிா்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது. காஷ்மீா் பள்ளத்தாக்கில் அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கியிருப்பதற்கு, உளவுத் துறை தோல்வியே காரணம்.

காஷ்மீரி பண்டிட்டுகள் பாதுகப்பாக சொந்த ஊா் திரும்புவதற்கான உத்தரவாதத்தை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மத மற்றும் ஜாதி அடிப்படையிலான அரசியலை பாஜக நிறுத்திக்கொண்டு, இந்திய குடிமக்களின் சமத்துவம், வாழ்வாதாரம், பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து காஷ்மீரி குடிமக்களின் பாதுகாப்பையும் அமித் ஷா தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவா் கூறினாா்.