நம்பிக்கை வாக்கெடுப்பில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்

இங்கிலாந்து பிரதமராக 2019ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். 2020ஆம் ஆண்டில் கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு சட்டத்தை மீறி மே மாதம், லண்டனில் உள்ள பிரதமரின் அலுவலக இல்லத்தில் 100க்கும் மேற்பட்டோரை அழைத்து விருந்து நடத்தியதாக போரிஸ் ஜான்சன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது சர்ச்சையான நிலையில், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லண்டன் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். பிரிட்டனின் பிரதமராக ஆட்சியில் உள்ள ஒருவர் மீது சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். அதேபோல், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப்பின் இறுதி சடங்கின் போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியதும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த இரு விவகாரங்களை முன் வைத்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. சொந்த கட்சியினரும் போர் கொடி தூக்கியதால், போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பெரும்பான்மை எம்.பி.க்கள் கன்சர்வேடிவ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். தொடர்ந்து, போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், 59 சதவீத வாக்குகளை பெற்று போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் 211 எம்பிக்கள் ஆதரவாகவும், 148 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.