அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளன.
நம் நாட்டின் ராணுவத்தை மேலும் பலப்படுத்தும் திட்டத்தின்கீழ், அக்னி ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டு அவ்வபோது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான (DRDO) கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 4 ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. ஒரு டன் எட கொண்ட அணு ஆயுதங்களை ஏந்திச்சென்று 4,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கையை துல்லியமாக தாக்கவல்ல திறன் கொண்டது அக்னி 4 ஏவுகணை.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி 4 ஏவுகணை இலக்கைத் துல்லியமாக தாக்கியது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது அக்னி 4 என்பது அக்னி வகை வரிசை ஏவுகணைகளில் நான்காவதாகும். இந்த ஏவுகணையின் வெற்றி, இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அக்னி ஏவுகணைகள், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, அவ்வப்போது சோதித்து பார்க்கப்படுகின்றன. இந்த வகையில், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் அக்னி – 4 ஏவுகணையில் சில நவீன தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஏவுகணை, நேற்றிரவு 7:30 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.