ஒருமித்த குரல் எழுப்ப வேண்டிய தருணம் இது: பினராயி விஜயன்

வகுப்புவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முகமது நபிகள் குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் பல நாடுகளின் எதிர்ப்பை இந்திய சம்பாரித்துள்ளது. குறிப்பாக துபாய், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்நாடுகளின் இந்திய தூதர்களுக்கு சம்மனும் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தால் உலக அளவில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல தலைவர்கள் தங்களது கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘முகமது நபிக்கு எதிராக பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கீழ்த்தரமான கருத்துக்களால், நமது மதிப்பிற்குரிய மதச்சார்பற்ற ஜனநாயகத்தை உலகத்தின் முன் மீண்டும் ஒருமுறை இழிவுபடுத்தியுள்ளது சங்பரிவார். மேலும் மதவெறி சக்திகளுக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்ப வேண்டிய தருணம் இது’ என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.