பிரிட்டன் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் வாரத்தில் 4 நாள்கள் மட்டும் பணிபுரியும் முறையை சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6 மாதங்களுக்கு நீடிக்கும் இந்த அறிமுகத் திட்டத்தில், சிறிய நிதி நிறுவனங்கள் முதல் பெரிய நிதி நிறுவனங்கள் வரை இதில் பங்குகொள்கின்றன. 70 நிறுவனங்களைச் சேர்ந்த 3300 ஊழியர்கள் வாரத்தில் 4 நாள்கள் மட்டும் பணிபுரிய உள்ளனர். வீக் குளோபல், திங்டேங்க் அட்டாநமி நிறுவனங்கள் கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.
இந்த திட்டமானது தொழிலாளர்களின் நலனிலும், உற்பத்தி திறனை அதிகரிப்பதிலும் எந்த அளவிற்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என நிறுவன அமைப்பாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளார்கள். வாரத்தில் 4 நாட்கள் பணிபுரிந்தாலும் 3300 ஊழியர்களுக்கும் முழு ஊதியத்தையும் 70 நிறுவனங்கள் வழங்கும். பிரிட்டன் மனிதர்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.