சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து!

சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கன்னியாகுமரி கூட்டத்தில் இழிவுபடுத்தி பேசியதால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் மீது அவதூறுகளை இனி பரப்ப மாட்டேன் என உறுதி அளித்ததால் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் கிடைத்தது.
ஆனால் ஶ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் நிறுவன விடுதியில் உணவை சாப்பிட்ட பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அந்த போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பிவிட்டார் சாட்டை துரைமுருகன் என்ற குற்றச்சாட்டில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடந்த 6 மாதங்களாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சாட்டை துரைமுருகன். இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, சமூக வலைதளங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வந்தவர் சாட்டை துரைமுருகன். நீதிமன்றத்தில் உறுதி அளித்த பின்னரும் அதனை மீறி அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பியதால் சாட்டை துரைமுருகனின் ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டால் அதனை சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களே நீக்க வேண்டும். அவ்வாறு நீக்காவிட்டால் சமூக வலைதள நிறுவனங்களும் குற்றவாளிகள்தான். இத்தகைய அவதூறுகளை போலீசார் நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்தது.