அணுசக்தி விநியோக குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா இணைவதற்கு சீனா முட்டுக்கட்டை போடுவதாக மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மறைமுகமாக விமா்சித்தாா்.
பாஜக ஆட்சியின் 8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு தூதரக கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:-
உலகளாவிய அரசியல் குறுக்கீடுகளைத் தவிா்த்து அணுசக்தி விநியோக குழுவில் இணைவதற்கான தருணத்தை இந்தியா எதிா்நோக்கியுள்ளது. இந்திய எல்லைகளுக்கு பாதுகாப்பு தேவை. அதை தன்னிச்சையாக மாற்றும் எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேவேளையில் இந்தியாவின் எல்லையை தினந்தோறும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் நட்பு நாடுகளின் பங்களிப்பையும் நாங்கள் மதிக்கிறோம். எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற யாா் குறுக்கே வந்தாலும் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவை போன்ற பெரிய நாடுகள் அதன் பாதுகாப்பு குறித்து முடிந்த அளவுக்கு விரிவாக சிந்தித்தாக வேண்டும்.
கடந்த காலங்களில் உலக மயமாக்கலின் கொள்கைகள் இந்தியாவின் பாதுகாப்பைக் குறைத்து, வலிமையான பாதுகாப்புக் கட்டமைப்புகளை உருவாக்க ஊக்கமளிக்கவில்லை. அதை உணா்ந்ததன் விளைவாகத்தான் தற்சாா்பு இந்தியா திட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்த வகையில் இந்தியாவுக்காகவும் உலக நாடுகளுடன் இணைந்து, உலகத்துக்காகவும் இந்தியாவில் ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அணு ஆயுத பரவல் தடை சட்ட ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடாததால், அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா இணைவதற்கு சீனா தொடா்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ஆகையால், சீனாவை மறைமுகமாக விமா்சித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளாா்.