தமிழக அமைச்சர்கள் அனைவருமே தொடை நடுங்கிகள்; தமிழகத்தை தாண்டி எங்குமே செல்லமாட்டார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேலி பேசியுள்ளார்.
மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
ஜிஎஸ்டியில் எவ்வளவு நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியவில்லை. பிரதமர் சென்னைக்கு வந்திருந்தபோது வாய்க்கு வந்ததெல்லாம் முதல்வர் உளறி வந்தார்.
புது காஸ்டியூம் போட்டுள்ளார் அமைச்சர் சேகர் பாபு. மீண்டும் அவர் காவி வேட்டி கட்ட துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார். பழைய சேகர்பாபுவை பார்ப்பதற்குத்தான் மோடி அரசு காத்துக் கொண்டு இருக்கிறது. ஆதீனத்தின் மேல் மட்டும் நீங்கள் கையை வைத்து பாருங்கள். ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்தி விடுங்கள். மதுரையில் துறவிகள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. ஆதீனத்தை நேரில் வர சொல்லி முதல்வரை சந்திக்க வைக்கின்றனர். ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்துவிட்டனர். இவர்களுடைய அழிவுக்கு அதுதான் காரணமாக இருக்கும்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகள் 10 தனியார் மருத்துவ கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். 2006 முதல் 2011 வரை ஜிடுசியல் என்குயரி போட்டால் இன்று கோபாலபுரத்தில் உள்ள பாதிப்பேர் சிறைக்கு செல்ல வேண்டும்.
‘ஹிந்தி கண்டிப்பாக திணிக்கப்படாது – எனக்கு ஹிந்தி தெரியாது; டெல்லி வந்துதான் ஹிந்தியை கற்றுக்கொண்டேன்’ என்று பிரதமர் கூறியுள்ளார். ஆப்ஷனாகதான் ஹிந்தி உள்ளது என கூறுகிறார். புதிய கல்விக் கொள்கையில் என்ன உள்ளதோ அதை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு தமிழகத்தின் கல்விக் கொள்கை என்று கூறுவதற்கு தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் வெட்கப்பட வேண்டும். மத்திய அரசின் எந்த கூட்டத்திற்கும் இங்குள்ள அமைச்சர்கள் செல்வதில்லை. குஜராத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் பங்கேற்க நமது கல்வி அமைச்சருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆறு மாதத்திற்கு முன்னர் கல்வி துறை செயலாளர்களுக்கு கூட்டம் நடத்தியபோதும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அப்போது அமைச்சர்களுக்கு ஏன் அழைப்பு கொடுக்கவில்லை என்று கூறி செயலாளரை அனுப்பவில்லை. இங்குள்ள அமைச்சர்கள் அனைவருமே தொடை நடுங்கிகள். தமிழகத்தை தாண்டி எங்குமே செல்லமாட்டார்கள்
நியூட்ரீசன் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதை ஆதாரத்தோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். பால்வளத் துறை அமைச்சர் நாசர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போட்டி போட்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் ஒரு கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்துள்ளது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஊழல்களையும் மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வைக்கப் போகிறோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் 25 இடங்களில் பாஜக வெற்றி பெற வேண்டும். குறிப்பாக 5 எம்பிக்கள் தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சரவைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.