புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து சோதனை அடிப்படையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது
மருத்துவ உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி விஞ்ஞானிகள், மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து சோதனை அடிப்படையில் அமெரிக்காவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதனை வரலாற்றில் முதன்முறை எனவும், மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல் எனவும் மருத்துவ உலகம் கொண்டாடி வருகிறது.
அமெரிக்காவின் மேன்ஹாட்டனில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில், குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 18 பேருக்கு டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்ற மருந்து மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் ஆறு மாதங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இறுதியில், இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்களின் உடலில் இருந்து கேன்சர் செல்கள் காணாமல் போயுள்ளது. குணப்படுத்த முடியாத மோசமான இறுதி நிலையை அடைந்தவர்களையும் இந்த மருந்து குணப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் பரிசோதனை, எண்டோஸ்கோபி, PET ஸ்கேன் எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி, MRI ஸ்கேன் என அனைத்து சோதனைகளும் செய்யப்பட்ட பின்னர், அவர்கள் அனைவரும் 100 சதவீதம் புற்றுநோயில் இருந்து குணமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் சிகிச்சை அளிக்கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர்கள் உடலில் மீண்டும் கேன்சர் செல்கள் தோன்றவில்லை.
பொதுவாக கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் நபர்களுக்கு சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. சோதனையில் பங்கேற்ற அனைவருக்கும் கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேன்சர் செல்கள் பொதுவாக உடலின் எதிர்ப்பு சக்தியில் இருந்து எஸ்கேப் ஆக மாஸ்க் போன்ற ஒரு படலத்தை கொண்டு மறைந்து இருக்கும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள் கேன்சர் செல்களை கண்டறிய முடியாது. ஆனால் இந்த மருந்து அந்த மாஸ்க்கை நீக்குவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள், சுயமாக கேன்சர் செல்களை அழிக்க வழி செய்கிறது. இதனால் இயற்கையாக கேன்சர் செல்கள் அழிகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோஸ்டர்லிமாப் மருந்தை ஸ்பான்சர் செய்த கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் என்ற நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது. இந்த மருந்து சிறப்பாக செயல்படுவதாக இது தொடர்பான ஆய்வு கட்டுரையை எழுதி உள்ள மருத்துவர் ஆண்ட்ரியா செரிக் தெரிவித்துள்ளார். “புற்றுநோய் வரலாற்றில் இதுவே முதல் முறை” என்று ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் லூயிஸ் ஏ. டயஸ் ஜே என்பவர் கூறுகிறார்.
மருந்தை மதிப்பாய்வு செய்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இந்த சிகிச்சையானது நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. ஆனால் இது அதிக நோயாளிகளுக்கு வேலை செய்யுமா? புற்றுநோய் செல்கள் உண்மையிலேயே அழிகிறதா? என்பதைப் கண்டறிய ஒரு பெரிய அளவிலான சோதனை தேவை” என்று தகவல் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த மருந்து பற்றிய கூடுதல் ஆய்வுகள் வரும் நாட்களில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு சுமார் ரூ.9 லட்சம் வரை செலவாகலாம் என கூறப்படுகிறது. அதுவே சந்தைக்கு வரும் பட்சத்தில் அதன் சந்தை விலை இதனை விட கூடுதலாக இருக்கும் என தெரிகிறது.