காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரம் உள்ளது: பசவராஜ் பொம்மை

மேகதாது அணை விவகாரம் பற்றி காவிரி மேலாண்மை கூட்டத்தில் பேச தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார்.

காவிரி ஆற்றின் பிறப்பிடமாக குடகு மாவட்டம் திகழ்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணை கட்டப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் நீரை பங்கிட்டுக் கொள்வதில் கர்நாடகம், தமிழகம் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு ராமநகர் மாவட்டம் மேகதாது எனும் இடத்தில் கர்நாடகம்-தமிழ்நாடு எல்லையில் காவிரியின் குறுக்கே புதிதாக அணை கட்ட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கர்நாடகத்தில் இருந்து தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு காவிரி நீரை பங்கிட்டு வழங்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆணையத்தின் கூட்டம் வருகிற 17-ந் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஆகும். இதற்கிடையே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்த முழுமையான வரைவு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு, மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. மேலும் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்ட விரைவில் அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக அவர் அடிக்கடி டெல்லிக்கும் சென்று ஜல்சக்தி துறை மந்திரியை நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் வருகிற 17-ந் தேதி நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் கர்நாடக அரசு புதிதாக அணை கட்டுவது தொடர்பாக தாக்கல் செய்த விரிவான வரைவு அறிக்கை குறித்து விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மைசூருவுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் வருகிற 17-ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கிடையே அந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசிடம் கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான வரைவு அறிக்கை தொடர்பாக ஆலோசிக்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இது, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் கூடுதலான மனு ஆகும். இதுபோன்று சுப்ரீம் கோர்ட்டில் பலவிதமான மனுக்கள் இருப்பதை நீங்கள்(மக்கள்) புரிந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு, கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் அதை கர்நாடக அரசு உடனடியாகவும், சரியாகவும் கையாண்டு பதில் அளிக்கும். மத்திய அரசு எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு எந்தவித அதிகார வரம்பும் இல்லை.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தும் ஒரு அமைப்பாகும். இந்த ஆணையத்திற்கு, எந்தவிதமான அணை கட்டவும், நீர்ப்பாசன திட்டங்களுக்கும் அனுமதி வழங்க தனி அதிகாரம் உள்ளது. மக்களின் குடிநீர் தேவைக்காக, அதுபோல் காவிரி நடுவர் மன்றம் மற்றும் கோர்ட்டின் உத்தரவுகளை கண்காணிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை நிறைவேற்றப்பட்டால் அதன்மூலம் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும் மேகதாது அணையில் இருந்து பெருநகரமாக விளங்கும் பெங்களூருவில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி. வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக நான்(பசவராஜ் பொம்மை) தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.