இரட்டை இலை பெற லஞ்சம்: அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை ஏற்பு!

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்த ரூ.1.3 கோடி பணத்தை யார் கொடுத்தது? என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து பெறுவதற்காக டிடிவி.தினகரன் தரப்பில் இருந்து தனக்கு வழங்கப்பட்டதாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்தார். இந்த வழக்கில் டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியில் உள்ளார்.

இந்த வழக்கில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடவடிக்கையின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சில மாதங்களுக்கு முன் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மட்டுமே பிரதான குற்றவாளி என்றும், அவர் கையில் இருந்த பணத்திற்கான மூல ஆதாரம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த குற்றப்பத்திரிக்கை தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் தான் பிரதான குற்றவாளி என தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. குற்றவாளி பட்டியலில் டிடிவி.தினகரன் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இல்லை என்றாலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கும் போது டிடிவி.தினகரன் கண்டிப்பாக ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அமலாக்கத் துறைக்கு எந்தவித தடையும் இல்லை’ என உத்தரவிட்டார்.