கொரோனா பரிசோதனை கருவிகள் விற்பனை விவகாரத்தில், வியட்நாம் சுகாதாரத் துறை அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா எனும் கொடிய வைரஸ் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக ஒட்டுமொத்த உலகையே வாட்டி வதைத்து வந்தது. பொதுமுடக்கம், தடுப்பூசி என உலக நாடுகளின் தொடர் நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில் கொரோனா கருவிகள் விற்பனை விவகாரம் வியாட்நாமில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்நாட்டின் ‘வியட் ஏ டெக்னாலஜி கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், கொரோனா பரிசோதனை கருவிகளை நாடு முழுவதும் விற்பனை செய்தது. அந்த கருவியின் உண்மை விலையை உயர்த்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய சுகாதாரத் துறைக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் சமீபத்தில் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயன் தான் லாங் மற்றும் முன்னாள் அறிவியல் துறை அமைச்சரும், ஹனோய் நகர மேயருமான சூ காக ஆன் ஆகியோர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தவிர, சுகாதார அமைச்சக அதிகாரிகள், பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், ராணுவ ஜெனரல்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.