பர்வேஸ் முஷாரபின் உடல்நிலை கவலைக்கிடம்!

பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரபின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷரப்(78), ராணுவ நடவடிக்கை வாயிலாக, 1999ல் பிரதமர் நவாஸ் ஷெரீபிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றினார். அது முதல், 2008 வரை, பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தார். கடந்த, 2016 முதல் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ‘அமிலாய்டோசிஸ்’ எனப்படும் உடல் உள்ளுறுப்பு திசு வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட முஷாரப், மூன்று வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் இறந்து விட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதை முஷாரப் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
எனினும், முஷாரபின் உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக தெரிவித்த குடும்பத்தினர், அவர் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யும்படி கோரியுள்ளனர்.

முஷாரப், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இவர் மீது, 2007ல் பாகிஸ்தான் அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்த வழக்கும் உள்ளது.