ராஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 2 பேர் பலி!

நேற்று பல மாநிலங்களில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நடந்த கல்வீச்சு சம்பவத்தால், ராஞ்சியில் இருவர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் 227 பேரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். பல பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி விவாதத்தின் போது, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

நுபுர் சர்மாவை கைதுசெய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று டெல்லி, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக் காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசுவதும், பாதுகாப்பு படையினர் போராட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்தனர்.

பிரயாக்ராஜில் சில வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கல் வீச்சு சம்பவத்தில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். சில மணி நேரங்கள் பதற்றமான நிலை காணப்பட்டது. பின்னர், போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதால் அமைதி திரும்பியது. இதுகுறித்து கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறுகையில், ‘உத்தரபிரதேசத்தின் ஆறு மாவட்டங்களில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.45 மணி வரை போராட்டத்தை தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் 227 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் பதற்றம் நீடிப்பதால், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, வன்முறையாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்நிலையில், ராஞ்சியில் நடந்த வன்முறையின் போது பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், வன்முறையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இச்சம்பவத்தால், பல இடங்களில் பதற்றம் நிலவி வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.