காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி ஆலோசிக்க தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது. மேகதாது பற்றி ஆலோசிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தி தெரிவிக்கப்பட்டது.
கர்நாடக மாநில அரசு காவிரி நதியில் தமிழக எல்லை அருகே மேகதாது என்ற பகுதியில் பிரமாண்டமான அணை கட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சட்டசபையில் நிதி ஒதுக்கீடு செய்து மேகதாது அணை பணிகளை தொடங்கும் வேலைகளையும் கர்நாடக அரசு ஆரம்பித்துவிட்டது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் வரும் தண்ணீர் அளவு கடுமையாக குறையும். இதன் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகும். இதை கருத்தில் கொண்டே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வழக்குக் தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வருகிற 17-ந்தேதி நடைபெறும் என்று அந்த ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.கல்தர் சமீபத்தில் அறிவித்தார். அதோடு அவர் அந்த கூட்டத்தில் கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டுள்ள மேகதாது அணை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார். கல்தரின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி ஆலோசிக்க தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது. மேலும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கல்தருக்கும், தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அதில், “17-ந் தேதி கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கும் முடிவை கைவிட வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது. மேலும் மேகதாது பற்றி ஆலோசிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தி தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சட்ட நிபுணர்களிடம் இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கல்தர் ஆலோசனை நடத்தினார். அப்போது சட்ட நிபுணர்கள் அவரிடம், “காவிரி நடுவர் மன்றத்தால் வெளியிடப்பட்ட உத்தரவின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளில் எதையும் அமல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது” என்று தெரிவித்தனர். இதையடுத்து 17-ந்தேதி கூட்டத்தில் திட்டமிட்டபடி மேகதாது அணை விவகாரத்தை ஆலோசிக்க காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்த தகவலை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கல்தர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது உறுதிபடுத்தி உள்ளார். சட்ட நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளையும், மேகதாது பற்றி ஆலோசிக்க உள்ள அதிகாரங்கள் பற்றியும் உரிய ஆவணங்களை தமிழக அரசுக்கு அனுப்பி இருப்பதாகவும் கல்தர் கூறி உள்ளார். எனவே 17-ந் தேதி கூட்டத்தில் கலந்து கொண்டு காவிரி பாசன மாநிலங்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் வருகிற 16-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அதன் செயலாளர் பி.ஆர். பாண்டியன் அறிவித்துள்ளார்.