5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

5ஜி தொலைதொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் 5ஜி தொலைதொடர்பு சேவை பயன்பாட்டில் உள்ளது. அதே சமயம் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணையம் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் எப்போது 5ஜி சேவை தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தொலைதொடர்புத்துறை அளித்த பரிந்துரைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

5ஜி தொலைதொடர்பு சேவை என்பது தற்போது நடைமுறையில் இருக்கும் 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மொத்தம் 72 ஜிகா ஹெர்ட்ஸ் அளவிலான அலைக்கற்றைகள், மொத்தம் 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.