ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை விசாரணை செய்வதாக விஜய் வசந்த் குற்றச்சாட்டினர்.
நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் காங்கிரஸ் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இன்றும் பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திருநாவுக்கரசர், விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது டெல்லி போலீசார் கடந்த இரண்டு நாட்களாக நடத்திவரும் காட்டுமிராண்டி தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று போராட்டம் நடத்த முடிவு செய்தோம். தலைவர் ராகுல் காந்தியை கடந்த இரண்டு நாட்களாக பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. இன்று மூன்றாவது நாளாக மீண்டும் விசாரணைக்காக தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா அரசின் இந்த ஜனநாயக விரோத போக்கை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கொடூரமாக தாக்கி கைது செய்து வருகின்றனர்’ என்று விஜய் வசந்த் கூறி உள்ளார்.
இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். ராகுல்காந்தியிடம் விசாரணைக்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். அவர்களும், தொண்டர்களும் போலீசாரின் தடுப்புகளை மீறி அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். உடனே போலீசார் மகளிரணியினர் காங்கிரஸ் தொண்டர்களை தடுத்தனர். இதனால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. சிலர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தை சேர்ந்த ஜோதிமணி எம்.பி. போலீசார் தடையை மீறி சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது அவர் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார். அதேபோல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். அவர்களை கைது செய்து பஸ்களில் ஏற்றி அழைத்து சென்றனர். மேலும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காங்கிரசாரின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி சி.ஆர். பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.