வழிபாட்டு மறுப்பு என்பது, மற்றொரு வகையான போர் யுக்தி: வேல்முருகன்

வழிபாட்டு மறுப்பு என்பது, மற்றொரு வகையான போர் யுக்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

2009 ஆம் ஆண்டு, இலங்கையில் போர் முடிவுக்கு பிறகு, பௌத்தர்களின் ஆக்கிரமிப்புகளும், அதிகாரமும் தலை தூக்கத் தொடங்கியது. ஈழத்தில் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அங்கு சிங்களவர்களும், சிங்கள ராணுவமும் குடியமர்த்தப்பட்டன. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள், புத்த விகாரைகளாக மாறியது. குறிப்பாக, தமிழர்களின் வழிபாட்டிடமான செம்மலை நீராவியடிப்பிள்ளையார் இன்று பௌத்தர்களின் விகாரைகளாக வேரூன்றியிருக்கின்றது. நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு, இன்று பௌத்தர்களின் இராஜ்ஜியமானது. இப்போது குருந்தூர்மலையிலும் அதே நிலை ஏற்பட்டிருக்கின்றது.

ஈழத்தில், தமிழர்களின் பாரம்பரிய உரிமைகள் மறுக்கப்படும் இச்சூழலில், குருந்தூர்மலையில் சிங்கள பௌத்த அடையாள சின்னங்களை நிறுவி, தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கும் முயற்சி இன்று தொடக்கப்பட்டிருக்கின்றது. கட்டுமானப் பொருட்களும் இன்று குவிக்கப்பட்டிருக்கின்றன. குருந்தூர்மலை முக்கியமாக, தற்போது குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டிருந்த சிவன், ஐயனாரின் சூலம் உடைக்கப்பட்டதோடு, வழிபாட்டு எச்சங்களும் எரிக்கப்பட்டுள்ளன. குருந்தூர்மலை தமிழர்களின் பூர்வீக பகுதியே. அதில் உள்ள தெய்வங்களை அக்கிராம மக்கள் பூர்வீகமாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். இதற்கு அங்குள்ள எச்சங்களும், சிதைவுகளும் வரலாற்று ரீதியாக பறைசாற்றுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் 2300 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது என ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இம்மலையில் இருக்கும் சிதைவுகளும், எச்சங்களும் பௌத்தர்களது என போலியான ஆதாரங்களை சித்தரித்ததோடு, வட கிழக்கில் காணப்படும் மலைகள், பௌத்த விகாரைகளை அடிப்படையாக கொண்டது என்று சிங்கள பேரினவாத அரசு கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து வருகிறது.

பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியாவை, இந்துத்துவா என்ற ஒற்றை மதத்தின் பெயரால் நிறுவ மோடி அரசு எப்படி முயல்கிறதோ, அதே போன்று, இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளிலும் பௌத்தம் என்ற ஒற்றை மதத்தை நிறுவ சிங்கள பேரினவாத அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியை பொறுத்தவரை, வைதீகம், சமணம், பௌத்தம் ஆகிய மூன்று மதங்களுமே வண்ணக் கொள்கை உடையது தான். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கொண்டவை தான். இம்மூன்று மதங்களும் பிற்போக்கு கருத்துக்களை உள்ளடக்கியவை தான். பௌத்தம் சமத்துவம் கொண்டவை என அண்ணல் அம்பேத்கர் கூறினாலும் கூட, அக்கருத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முரண்பட்டு நிற்கும். சமணம் பொறுத்தவரை வஜ்ரநந்தி முனிவனால் எழுத்தப்பட்ட, மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கிய, சமண நூலான ஆசாரக் கோவையே சான்று. ஆனால், அவ்விவாதங்களுக்குள் நாம் தற்போது செல்ல வேண்டிய அவசியமில்லை.

இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் முருகன், சிவன், ஐயனார் கோயில்களை சிங்களப் பேரினவாத அரசிடம் இருந்து காக்க, அங்குள்ள தமிழர்கள் குரல் எழுப்பியும், போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது தமிழ்நாட்டு தமிழர்களின் கடமை. எனவே, மிக தொன்மையான வரலாற்றை கொண்ட முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதிசிவன், முருகன், ஐயனார் கோயிலை காக்க, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும். இதில் கடவுளை ஏற்போரும் இருக்கலாம், கடவுளை மறுப்போரும் இருக்கலாம். அங்கு கோயில்கள் என்பதை தாண்டி, தமிழர்களின் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று எச்சங்கள் நிறைந்திருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். வழிபாட்டு மறுப்பு என்பது, மற்றொரு வகையான போர் யுக்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசின் துணையோடு, இலங்கையில் உள்ள தமிழர்களின் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.