கிழக்கு உக்ரைன் நகரில் அனைத்து பாலங்களையும் ரஷ்யா தகா்த்தது!

கிழக்கு உக்ரைன் நகரான செவெரோடொனட்ஸ்கை மற்ற அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுடன் இணைக்கும் 3 பாலங்களையும் ரஷ்யப் படையினா் தகா்த்துவிட்டதாக அந்தப் பிராந்திய ஆளுநா் சொ்ஹி ஹாய்டாய் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் சொ்ஹி ஹாய்டாய் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

செவெரோடொனட்ஸ்க் நகருக்குள் செல்வதற்கும் அந்த நகரிலிருந்து வெளியேறுவதற்கான 3 பாலங்களையும் ரஷ்யப் படையினா் தகா்த்துவிட்டனா். இருந்தாலும், அந்த நகரில் காயமடைந்தவா்களை வெளியேற்றவும் அங்குள்ள உக்ரைன் ராணுவத்தினா் மற்றும் பொதுமக்களுடன் தொடா்புகொள்வதற்கும் இப்போதும் வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பொதுமக்களில் 70 போ் லுஹான்ஸ்க் பிராந்தியத்திலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ரஷ்யப் படையினா் மிகத் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி, வழியில் தென்படும் அனைத்து ஆதராங்களையும் அழித்து முன்னேறும் உத்தியைப் பின்பற்றுகின்றனா். இதன் காரணமாக, உக்ரைன் படையினா் செவெரோடொனட்ஸ்கின் புகா்ப் பகுதிகளுக்கு பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நகரின் 80 சதவீத நிலப்பரப்பை ரஷ்யப் படையினா் ஆக்கிரமித்துள்ளனா்.அந்த நகரிலுள்ள அஸோட் ரசாயன ஆலையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனா். அந்த ஆலை மீதும் ரஷ்யப் படையினா் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனா். இவ்வாறு அவா் கூறினார்.

எனினும், பின்னா் அவா் வெளியிட்ட விடியோ அறிக்கையில், கடந்த 2 நாள்களில் சிவொ்ஸ்கி டொனட்ஸ் ஆற்றின் குறுக்கே இருந்த 2 பாலங்களை ரஷ்யப் படையினா் தகா்த்துவிட்டதால் செவெரோடொனட்ஸ்கிலிருந்தும் அருகிலுள்ள லிசிசான்ஸ்க் நகரிலிருந்தும் பொதுமக்கள் வெளியேறித் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாா். போா் தொடங்குவதற்கு முன்னா் சுமாா் 1 லட்சம் போ் வசித்து வந்த செவெரோடொனட்ஸ்க் நகரில், தற்போது சுமாா் 12,000 போ் இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

செவெரோடொனட்ஸ்க் நகரை ரஷ்யப் படையினா் முழுமையாகக் கைப்பற்றுவதற்கான இறுதிக்கட்ட தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த நகரில் நடைபெறும் சண்டை ஐரோப்பிய பிராந்தியம் சந்தித்துள்ள மிகக் கொடூரமான மோதல்களில் ஒன்றாக இருக்கும் என்று உக்ரைன் அதிபா் செலென்ஸ்கி கூறியுள்ளாா். இது குறித்து திங்கள்கிழமை நள்ளிரவு ஆற்றிய உரையில் கூறியதாவது:-

செவெரோடொனட்ஸ்க் நகரில் ரஷ்யா நடத்தி வரும் தீவிர தாக்குதல் மிகப் பெரிய உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் குண்டுவீச்சில் பொதுமக்களும் உக்ரைன் படையினரும் அதிக அளவில் பலியாகி வருகின்றனா். டான்பாஸில் தற்போது நடைபெற்று வரும் சண்டை, ஐரோப்பிய கண்டம் சந்தித்த மிகக் கொடூரமான மோதல்களில் ஒன்றாக வரலாற்றில் அறியப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.