மேட்டூர் அணையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் குழுவினர் ஆய்வு!

மேட்டூர் அணையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இம்மாதம் 22 ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டமும், 23ந்தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டமும் டெல்லியில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு முன்பாக மேட்டூர் அணையில் நீர் இருப்பு, நீர்வரத்து, நீர்திறப்பு குறித்தும் பாசனம் பெரும் பரப்பு மற்றும் பாசனத் தேவை குறித்தும் ஆய்வு செய்ய இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன் குமார், நீர்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அணையின் வலது கரை, இடதுகரை, கவர்னர் வியூ பாயிண்ட் நீர் அளவீட்டு மானி, நில அதிர்வு மானி ஆகியவற்றை பார்வையிட்டனர். அணை பராமரிப்பு நீர் மேலாண்மை குறித்தும் நீர்வளத் துறை அதிகாரிகளுடன் அணையின் இடது கரையில் ஆலோசனை நடத்தினார்கள். ஆய்வு முடித்துவிட்டு பின்னர் திருச்சி புறப்பட்டுச் சென்றனர்.

கர்நாடகம் காவிரியின் குறுக்கே அணைகட்ட மும்முரமாக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் நடைபெற்ற இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.