தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையே கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறினார்.
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
விஜயகாந்த் இப்போது பூரண நலமாக உள்ளார். மாதம்தோறும் அவர் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்வது வழக்கம் தான். ஆட்சியில் இருந்த போது செய்த தொடர் தவறுகளால் தான் அதிமுகவினர் இப்போது ஆட்சியை இழந்து வருந்துகிறார்கள். நாங்கள் சொன்னதை மட்டும் அவர்கள் சரியான நேரத்தில் செய்திருந்தால் அதிமுக எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து இருக்கும். இப்போதும் தேமுதிக தான் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது.
அண்ணாமலை இந்த அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குற்றஞ்சாட்டிய அவர் தான் இதனை நிரூபிக்க வேண்டும். தேமுதிகவை பொறுத்தவரை யாருக்கு எப்போது எந்த பதவி கொடுக்க வேண்டும் என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார். மகன் விஜய பிரபாகரனுக்குக் கட்சிப் பொறுப்பை வழங்குவது குறித்தும் விஜயகாந்த் தான் முடிவு செய்வார். இது குறித்த சரியான நேரத்தில் முடிவு எடுப்பார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை காரணமாக ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் மூலம் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க இளைஞர்கள் முயல்கிறார்கள். அதில் நஷ்டமடையும் போது வேறு வழியின்றி உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையாகச் செயல்பட்ட தமிழக போலீசார் இன்று மோசமான நிலையில் உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையே கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆதீனங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மதுரை ஆதீனம் பேசியது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், “ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது.. அதேபோல அரசியல்வாதிகள் ஆன்மீகம் பேசக்கூடாது.. ஒவ்வொருவரும் அவரவர் வேலையைச் செய்தாலே போதும். இதுபோல எந்தவொரு சர்ச்சைகளும் வராது. ஆளுநரும் முதலமைச்சரும் அவரவர் வேலையைச் செய்தால் போதும்! ஆளுநரும் ஆட்சியாளர்களும் மாறி மாறி குறை சொல்லும் நிலை தான் இப்போது ஏற்பட்டுள்ளது” என்றார்.