ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு இன்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். குருத்வாரா கர்கே பர்வான் பகுதியில் குண்டுகள் வெடித்தன. இதனால் குருத்வாராவுக்குள் இருந்த சீக்கியர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வர முயன்றனர். அப்போது தீவிரவாதிகள் குருத்வாராவுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் குருத்வாராவின் காவலாளி அகமது என்பவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். உடனே பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் விரைந்து வந்தனர். அவர்கள் குருத்வாராவுக்குள் புகுந்த தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டபடி இருந்தது.
குருத்வாரா வளாகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதனால் பெரும் கரும்புகை வெளியேறியது. தீவிரவாதிகள் தாக்குதலால் குருத்வாராவில் இருந்து வெளியேற முடியாமல் ஏராளமான சீக்கியர்கள் சிக்கி உள்ளனர். தாக்குதல் தொடங்கிய போது 3 பேர் வெளியே வந்து விட்டனர். இன்னும் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீக்கிய பக்தர் ஒருவர் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மற்றவர்கள் நிலைமை பற்றி தெரியவில்லை.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, காபூலில் உள்ள புனித குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காபூலில் இருந்து வெளியான தகவல்களால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். கூடுதல் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, “குருத்வாரா மீதான கோழைத்தனமான தாக்குதலை அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும். தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததில் இருந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எங்களின் முதல் மற்றும் முதன்மையான அக்கறை சமூகத்தின் நலனில் உள்ளது” என்றார்.
குருத்வாரா மீதான தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ஐ.எஸ். கொரோசன் பிரிவு சமீபத்தில் 2020-ம் ஆண்டு நடந்த குருத்வாரா தாக்குதல் மீண்டும் நடத்தப் போவதாக மிரட்டல் வீடியோ வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் காபூலின் ஷார்ட் பஜார் பகுதியில் உள்ள குருஹர்ராய் சாகிப் குருத்வாராவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.