அக்னிபத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், இந்தத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்தில் 4 ஆண்டு கால பயிற்சிக்குப் பிறகு, 25 சதவீத பேர் மட்டுமே நிரந்தரப் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வது என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்நிலையில், வன்முறை போராட்டங்களை விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டம் மற்றும், வன்முறையால் ரெயில்வே சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கும்படி, மத்திய அரசு, உத்தர பிரதேசம், தெலுங்கானா, பீகார், அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருக்கிறார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் போராட்டம் தொடர்பான நிலை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

மேலும், அக்னிபத் திட்டமானது, தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் விஷால் திவாரி தனது மனுவில் கூறி உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.