போதை பழக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும்: அன்புமணி

போதை பழக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறையை காப்பற்ற வேண்டும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி எம்.பி., பேசினார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அன்புமணி பேசியதாவது:-

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பொது வாழ்க்கைக்காகவும், தமிழக முன்னேற்றத்திற்காகவும் 43 ஆண்டுகளாக போராடி வருகிறார். அனைத்து மக்களும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்கு சமூகப் பிரச்னை முட்டுக்கட்டையாக உள்ளது. இதில் முதலாவது மது. அடுத்த தலைமுறையை நாம் மதுவிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டபோது தோல்வி அடைந்தேன். அதற்கு காரணம் மதுவிலக்கை முன்வைத்ததே. அதற்காக வருத்தப்படவில்லை. எதிர்கால தமிழகத்தின் கலாசாரம் மாறவேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தால் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பலரும் தங்களின் பொருளாதாரத்தை இழந்து, தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். இது சமூக பிரச்னை என்பதால் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து அரசு பணிக்கு அனுப்ப வேண்டும். 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை எதிர்காலத்தில் கண்டிப்பாக மீட்டெடுப்போம். ஆதிதிராவிடர், மீனவர்கள் உள்ளிட்ட பிற சமுதாயத்தில் இருப்பவர்களும் முன்னேற்றம் காண வேண்டும் என்பது தான் என்னுடைய கொள்கை.

தமிழகத்தில் மாற்றம் தேவை என்பதற்காகத்தான் 2.0 என்ற திட்டத்தை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. 55 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இலவசம் என்ற பெயரில் ஓட்டுக்காக மக்களை வஞ்சித்துள்ளனர். இந்த நிலை மாறவேண்டும். தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும். அனைத்தும் அப்போது மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் தேவையில்லாதது. ஏனென்றால் இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். 4 ஆண்டுகளுக்கு மட்டுமே வேலை என்று சொல்லும் போது, முழுமையாக அர்ப்பணிப்போ, ஈடுபாடோ இருக்காது. ராணுவத்தில் சேர்பவர்கள் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டுமென்றால் அவர்கள் முழுமையாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அதனால் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும். அதற்கான தேர்தல் வியூகங்கள் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலின் போது நிச்சயம் எடுக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியமைத்து உடன் கொரோனா பிரச்னையை சிறப்பாக கையாண்டார்கள். ஆனால், காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் மரணமடைவது தடுக்கப்பட வேண்டும். அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரிக்கிறது. நீட் தேர்வை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் அதே வேளையில், மாணவர்களின் பாடத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக எண்ணிக்கையில் அடிப்படையில் அதிமுக இருந்தாலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு சிறப்பு சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி தமிழக அரசை செயல்பட வைத்து வெற்றிபெற்றது பாமக தான். எங்கள் கட்சி எதிரிக் கட்சியாக அல்லாமல், எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.