தீவிரவாத அமைப்புகளுக்கு நிதிஉதவி வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில், சாம்பல் பட்டியலில் இருந்த பாகிஸ்தான், தற்போது விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டின் பெர்லினில் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (சர்வதேச அளவில் நடக்கும் நிதிக் குற்றங்களை கண்காணிக்கும் அமைப்பு) கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஏற்கனவே சாம்பல் (கிரே) பட்டியலில் உள்ள பாகிஸ்தானை அந்த பட்டியலில் இருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபரில் நடைபெறும் முழுமையான அமர்வின் போது, சாம்பல் நிற பட்டியலில் இருந்து விடுவித்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நடவடிக்கை குழுவின் ‘ஆன்சைட் விசிட்’ முடிவு குறித்த நிதிக் குற்ற கண்காணிப்பு அமைப்பின் இணையதளத்திலும் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக நிதி நடவடிக்கை பணிக்குழுவானது, தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நிதிஉதவி வழங்கி வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக, தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்தது. நிதி நடவடிக்கை பணிக்குழு பாகிஸ்தானுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அறிக்கையும் மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டோயின் பிளிங்கன், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவலைச் சந்தித்த பிறகு, இந்த செயல்முறை தொடங்கியதாகவும், பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும் சீனாவும் பாகிஸ்தானை பணிக்குழு உறுப்பினராக்க அங்கீகரித்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம்பல் நிற பட்டியலில் இருந்து பாகிஸ்தான் விடுவிக்கப்பட்டதற்கு தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். ஆனால், ஆளும் கூட்டணி தங்களது முயற்சியால் சாம்பல் நிற பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதாக கூறி வருகின்றனர்.