புளியங்குளத்திலிருந்து பாயும் புதிய குட்டிப்புலிக்கு புரட்சிகர வாழ்த்துகள்: திருமாவளவன்

சாதி ரீதியாக பேசிய ஆசிரியையிடம் அனைவரும் சமம் என்று கூறிய பள்ளி மாணவனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தேர்தல் தொடர்பாக அப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றும் கலைச்செல்வி, கணினி ஆசிரியை மீனா உதவியுடன் மாணவர் ஒருவரிடம் சாதி ரீதியாக பேசியுள்ளார். இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. அதில், “ஒரு சமூகத்தின் கையில் அரசு பள்ளி சென்று விடக்கூடாது. அனைத்து தரப்பு மாணவர்களும் இங்கு வந்து பயில வேண்டும்” என்று மாணவரின் சாதியையும், ஆசிரியையின் சாதியையும் சொல்லி, குறிப்பிட்ட ஒரு சாதிக்கு எதிரான வன்மத்தை தூண்டும் வகையில் அந்த ஆசிரியர் பேசுகிறார். அதற்கு பதிலளித்த அந்த மானவர் ‘அனைவரும் சமம் தானே டீச்சர்’ என்கிறார்.

இந்த ஆடியோ தொடர்பாக உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, ஆசிரியை மீனா ஆகியோரிடம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தினார். இதையடுத்து, அந்த ஆசிரியைகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆசிரியை போனில் சாதி ரீதியாக பேசியதை ஆடியோ பதிவு செய்து வெளியிட்டு அம்பலப்படுத்திய மாணவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சாதி உணர்வில்லா சமூகத்தை உருவாக்க வேண்டும்; அதனை பிஞ்சு உள்ளத்திலேயே வளர்த்து அப்படியான தலைமுறையை உருவாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருவதற்கிடையே, ‘எல்லோரும் சமம்தானே டீச்சர்’ என்று இயல்பாக கூறி ஆசிரியைக்கு பாடம் எடுத்த மாணவரை தமிழ் சமூகம் கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில், சாதி ரீதியாக பேசிய ஆசிரியையிடம் அனைவரும் சமம் என்று கூறிய பள்ளி மாணவனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைத் தூவும் இழிசெயலுக்கு எதிர்வினையாக.. எல்லோரும் சமம் தானே டீச்சர் என.. பாடம் புகட்டிய பள்ளி மாணவனுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! புளியங்குளத்திலிருந்து பாயும் புதிய குட்டிப்புலிக்கு புரட்சிகர வாழ்த்துகள்” என்று திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.