தேர்தலை நடத்தாவிட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடையும்: இம்ரான்கான்

பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது. இதனை எதிா்த்து போராட்டம் நடத்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்தாா்.

அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு, அதிக அளவு பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது. அங்கு நிலவி வரும் பணவீக்கத்திற்கு எதிராக முக்கிய நகரங்களில் இம்ரான்கான் ஆதரவாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் போராட்டக்காரர்களோடு காணொளி மூலம் உரையாடினாா். அப்போது அவர் பேசியதாவது:-

நான் உங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கிறேன். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தப்படாவிட்டால் மேலும் குழப்பம் பரவும். முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை மேலும் மோசமடையும். தற்போது உள்ள அரசானது பொருளாதாரத்தைக் கையாளும் திறனற்றது. வரும் நாட்களில் விலைகள் அதிகமாக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.