யோகா ஏற்படுத்தும் அமைதி தனிப்பட்டவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நம்முடைய சமூகத்திற்கே யோகா அமைதியை தருகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
சர்வதேச யோகாதினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் யோகாசன நிகழ்ச்சி நடந்தது. கர்நாடக மாநில மைசூர் அரண்மனையில் இன்று காலை பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். அவர் வெள்ளை உடை அணிந்து யோகாசனம் செய்தார், அவருடன் கவர்னர் தாவர்சந்த் கெலாட், கர்நாடக முதல்- மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி சர்பானந்தா சோனவால் ஆகியோரும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியுடன் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். இதற்காக அவர்கள் அதிகாலை முதலே அரண்மனை வளாகத்தில் குவிந்தனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
மனதையும்,உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவுகிறது.அனைத்து பிரச்சினைகளுக்கும் யோகா ஒரு தீர்வாக அமைகின்றது. இந்த ஒட்டு மொத்த உலகமும் நமது உடலில் இருக்கும் ஆன்மாவில் இருந்து தான் தொடங்குகிறது. யோகாவை கூடுதல் வேலையாக நாம் நினைக்க கூடாது. யோகா தான் நமக்குள் இருக்கும் அனைத்தையும் உணர்த்துகின்றன. விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. நமக்கு மன அமைதியை யோகா கொடுக்கிறது. யோகா ஏற்படுத்தும் அமைதி தனிப்பட்டவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நம்முடைய சமூகத்திற்கே யோகா அமைதியை தருகிறது. இந்த நாட்டுக்கும், உலகிற்கும் யோகா அமைதியை கொடுக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.