மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் திடீரென போராட்டக்காரர்கள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று 8ஆவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகா தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி, மைசூருவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். நாடு முழுவதும் மிகவும் கோலாகலமான முறையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் மாலத்தீவின் தலைநகரான மாலேயில் உள்ள தேசிய கால்பந்து மைதானத்தில் இந்தியத் தூதரகம் சார்பில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென உள்ளே நுழைந்த கும்பல் ஒன்று பிரச்சினையை உண்டாக்கினர். நிகழ்ச்சிக்கு முன், போராட்டக்காரர்கள் யோகா இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் யோகா செய்வது சூரியனை வழிபடுவதைப் போன்றது என்று நம்புவதால் அவர்கள் யோகா கலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்திய கலாசார மையம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த கும்பலின் குறுக்கீடு காரணமாக யோகா நிகழ்ச்சியைத் தொடர முடியவில்லை. யோகா தின நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பி வந்தனர். அவர்களில் சிலர் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அமைச்சர்கள் அந்த கும்பல் உள்ளே நுழைந்தபோது மாலத்தீவு அரசைச் சேர்ந்த பல தூதர்கள், முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கும்பல் உள்ளே புகுந்து பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் அந்த இடத்தை அடித்து நொறுக்கினர். நிலைமை தீவிரமடைவதற்குள் போலீசார் தலையிட்டு, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டகாரர்களைக் கலைத்தனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி தெரிவித்தார். “மைதானத்தில் இன்று (நேற்று) காலை நடந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.