நாட்டுக்கு ஆபத்தான திட்டங்களையே ஆளும் பாஜக கட்சி நல்லது என்று வர்ணிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் மத்திய அரசின் புதிய திட்டமான ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து கருத்து ஏதும் கூறாமல் மெளனம் காத்து வந்தார். இந்த நிலையில் பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “புதுமை திட்டங்களைச் செயல்படுத்தும் பாதை சுலபமாக இருந்ததில்லை. கடந்த 8 ஆண்டுகளாக இந்தப் பாதையில் நாட்டு மக்களைக் கொண்டு செல்வதும் சுலபமாக இருந்ததில்லை. சீர்த்திருத்தங்கள் தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுகள் குறுகிய காலத்தில் அசெளகரியமாக இருந்தாலும் நீண்ட காலத்தில் அவை நாட்டு மக்களுக்கு நன்மையை அளிப்பதாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் காந்தி நேற்று செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி, உங்களின் சீர்த்திருத்தங்களால் மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அது காலத்துக்கேற்ற பலன்களையே காட்டுகிறது. பண மதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி., குடியுரிமை திருத்தச் சட்டம், பணவீக்கம் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, வேளாண்மை சட்டங்கள் முடக்கம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் தற்போது அக்னிபத் திட்டம். எதை நல்லது என்று ஆளும் பாஜக அரசு கூறுகிறதோ அது நாட்டு மக்களுக்கு ஆபத்தானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.