ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடக்கும் என , இன்றைய அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறினார்.
சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர், முன்னாள் அமைச்சர் சண்முகம் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசியதாவது:-
பொதுக்குழுவில் இத்துடன் இணைக்கப்பட்ட 2190 பொதுக்குழு உறுப்பினர்களல் கையொப்பமிட்டு கொடுக்கப்பட்ட பொருளை விவாதிக்க வேண்டும். இரட்டை தலைமையால் உள்ள நிர்வாக சிக்கல், ஒருங்கிணைப்பு இல்லாததால், திமுகவை எதிர்த்து செயல்பட முடியவில்லை. இது நிர்வாகிகள், பொது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
இரட்டை தலைமை முரண்பாடான, தெளிவில்லாத, ஒருங்கிணைப்பில்லாத செயல்பட்டால், தொண்டர்கள் இடையே சோர்வு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 100 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேற, தைரியமான, தெளிவான ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். தைரியமான, தெளிவான ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே பொதுக்குழுவில் இரட்டை தலைமை ரத்து செய்துவிட்டு ஒற்றை தலைமையின் கீழ் தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்து பதிவு செய்ய வேண்டும். இந்த பொதுக்குழுவில், அடுத்த பொதுக்குழுவிற்கான தேதியை இன்றே முடிவுசெய்து அறிவிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இது குறித்த தீர்மானத்தை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் வழங்கினார். தொடர்ந்து தமிழ் மகன் உசேன் கூறும்போது, அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி காலை 9: 15 மணிக்கு நடக்கும் என்றார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று காலை தொடங்கிய அதிமுக பொதுக் குழு, அடுத்த பொதுக் குழு கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டதுடன் நிறைவு பெற்றது. அதிமுகவின் ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை பொதுக் குழுவில் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக பொதுக் குழு உறுப்பினர்கள் பலரும் பூங்கொத்துகளையும், மலர்மாலைகளையும் அறிவித்து தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளிக் கிரீடமும், வீரவாளும் வழங்கப்பட்டது.