அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்க அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்த்தி பிரபாகர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ஆர்த்தி பிரபாகர் பெற்றுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:-

அதிபர் பைடன் முனைவர் ஆர்த்தி பிரபாகரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைக்கான அலுவலகத்தின் இயக்குநராக நியமனம் செய்துள்ளார். மேலும், அவரது பொறுப்பு உறுதி செய்யப்படும் போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தலைவரின் உதவியாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்கு அமெரிக்க அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான முதன்மை ஆலோசகர் பதவி, அமெரிக்க அதிபரின் பிரத்யேக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆலோசகர்களின் கவுன்சில் பதவி, அதிபரின் அமைச்சரவையின் உறுப்பினர் பதவி ஆகியவை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

63 வயதாகும் ஆர்த்தி பிரபாகர் தான் மூன்று வயதாக இருக்கும் போது, அவரது குடும்பம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றது. டெக்சாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு பெற்றார் ஆர்த்தி பிரபாகர். மேலும், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.ஹெச்.டி முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் இவர். தொடர்ந்து அமெரிக்காவின் தேசியப் பொறியியல் அகாடமி, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் முதலானவற்றில் ஆர்த்தி பிரபாகர் கௌரவப் பதவிகள் வகித்து வருகிறார்.