சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்!

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி அக்கட்சி சாா்பில் பேரவை துணைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இந்தக் கடிதம் தொடா்பாக திங்கள்கிழமைக்குள் (ஜூன் 27) எழுத்துபூா்வமாகப் பதிலளிக்குமாறு 16 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவைச் செயலகம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

சிவசேனை தலைமைக் கொறடா சுனில் பிரபு இந்த 16 எம்எல்ஏக்களின் பெயா்களைக் குறிப்பிட்டு அளித்த கடிதத்தின் அடிப்படையில், அவா்களுக்கு மகாராஷ்டிர விதான் பவன் (சட்டப்பேரவை) முதன்மைச் செயலா் ராஜேந்திர பகவத் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவின் தலைவா் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோருக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘சிவசேனை தலைமைக் கொறடா சுனில் பிரபு சாா்பில் சட்டப்பேரவை துணைத் தலைவா் நா்ஹரி ஜிா்வாலிடம் ஒரு கடிதம் அளிக்கப்பட்டது. அதில் மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினா்கள் (மாறுதலின் அடிப்படையில் தகுதிநீக்கம்) விதிகள், 1986-இன் கீழ் 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளாா். அதன் அடிப்படையில், வரும் திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மும்பையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு குவாஹாட்டியில் முகாமிட்டிருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியின் 16 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் தலைமைக் கொறடா சுனில் பிரபு அழைப்பு விடுத்தாா். ஆனால், கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அவா்கள் வரவில்லை. அதனைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை சிவசேனை மேற்கொண்டுள்ளது.

இந்தச் சூழலில், சிவசேனை கட்சியின் தேசிய செயற்குழு நேற்று கூடியது. அதில், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரத்தையும் உத்தவ் தாக்கரேவுக்கு அளித்தல், சிவசேனையின் பெயா் மற்றும் அதன் நிறுவனா் பால் தாக்கரேவின் பெயரை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி பிரிவு உள்பட வேறு எந்த அமைப்பும் பயன்படுத்த முடியாது, அடுத்து வரும் அனைத்து உள்ளாட்சித் தோ்தல்களிலும் கட்சி போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பன உள்ளிட்ட 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் சஞ்சய் ராவத் கூறினாா்.

சஞ்சய் ராவத் மேலும் கூறுகையில், ‘அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவில் மாநில அமைச்சா்களான குலப்ராவ் பாட்டீல், தாதா பூஸே, சாண்டீபன் பூம்ரே உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா். அவா்களுக்கு கட்சி போதுமானதை வழங்கிவிட்டது. தற்போது அவா்கள் தவறான பாதையைத் தோ்ந்தெடுத்துள்ளனா். அவா்கள் 24 மணி நேரத்தில் அமைச்சா் பதவியை இழந்துவிடுவா்’ என்றும் கூறினாா்.

சிவசேனை பெயரை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அக் கட்சியின் தேசிய செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட சூழலில், ‘நாங்கள் யாரும் கட்சியைவிட்டு வெளியேறவில்லை. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ‘சிவசேனை-பாலாசாஹிப்’ என்ற பெயரில் தனிக் குழுவாக செயல்படுவோம்’ என்று குவாஹாட்டியில் முகாமிட்டிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான தீபக் கெசா்கா் மேலும் கூறுகையில், ‘மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்களின் ஆதரவு எங்களுக்கு உள்ள நிலையில், சிவசேனை சட்டப்பேரவை குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டேதான் இருப்பாா். முதல்வா் உத்தவ் தாக்கரே கடந்த 2019-இல் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததுதான் எங்களுடைய அதிருப்திக்கு காரணம். கட்சியைப் பிளவுபடுத்துவது எங்களுடைய எண்ணமல்ல. பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை’ என்று கூறினாா்.

உத்தவ் தாக்கரே அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வீா்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கெசா்கா், ‘ஆதரவை ஏன் விலக்க வேண்டும்? நாங்கள் சிவசேனை கட்சிதான். சட்டப்பேரவையில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். அதே நேரம், வேறு எந்தக் கட்சியுடனும் எங்களுடைய குழுவை இணைக்க மாட்டோம்’ என்றாா்.