பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வீட்டில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். கடந்த 2018இல் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற இவர், சமீபத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் கூட அவருக்கு எதிராகத் திரும்பியதில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இப்போது மக்கள் ஆதரவைத் திரட்ட பேரணிகளை நடத்தி வருகிறார். தனது அரசைக் கவிழ்க்க அந்நிய நாட்டின் சதி இருப்பதாக முதலில் இம்ரான் கான் குற்றஞ்சாட்டினார். மேலும், அந்நாட்டு அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.
இதற்கிடையே இம்ரான் கானை கொலை செய்யச் சதி நடைபெற்று வருவதாகவும் கூட தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தச் சூழலில் இம்ரான் கானை உளவு பார்க்கும் முயற்சி முயற்சி முறியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவியை நிறுவ முயன்றபோது பிடிபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்ரான் கான் வீட்டில் பணிபுரியும் ஊழியரிடம் பணம் கொடுத்து, அவரது படுக்கை அறையில் உளவு கருவியை நிறுவ முயன்று உள்ளனர். சரியாக அந்த சமயத்தில் மற்றொரு ஊழியர் இதைப் பார்த்துவிட்டார். இதையடுத்து அந்த ஊழியர் உடனடியாக பாதுகாப்புக் குழுவிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்ததில் இந்த உளவு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியரைத் தடுத்து நிறுத்திய பாதுகாப்புக் குழு, அவரை பாகிஸ்தான் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இம்ரான் கானை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாகத் தகவல் பரவி வரும் நிலையில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக, அரசு உட்பட அனைத்து உளவு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்தனர். இது குறித்து பிடிஐ கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷெபாஸ் கில் கூறுகையில், “இம்ரான் கான் அறையைச் சுத்தம் செய்யும் ஊழியருக்கு உளவு பார்க்கும் கருவியை நிறுவப் பணம் கொடுத்துள்ளனர். இது மிகவும் கொடூரமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. தகவல்களைப் பெற எங்கள் கட்சியினர் அச்சுறுத்தப்படுகின்றனர். இது போன்ற வெட்கக்கேடான செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட அந்த ஊழியர் பல அதிர்ச்சி தகவல்களை எங்களிடம் கூறி உள்ளார். அதை நேரம் வரும் போது கூறுவோம்” என்றார்.