பஞ்சாபில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரது மகன் மர்ம மரணம்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சஞ்சய் பொப்லி, கழிவு நீர் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சஞ்சய் பொப்லியின் வீட்டை நேற்று சோதனையிட்டனர்.
இது குறித்து சண்டிகர் காவல் துறை கண்காணிப்பாளர் குல்தீப் சாஹல் கூறியதாவது:-
லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வீட்டை சோதனையிட்ட போது திடீரென குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அந்த பகுதியை நோக்கி அதிகாரிகள் ஓடியபோது சஞ்சய் பொப்லியின் மகன் கார்திக் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவர், தன் தந்தையின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதை கார்திக்கின் தாய் மறுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தான் தன் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். விசாரணை முடிவில் தான், இது கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும்.