சிவசேனா சார்பில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். இதற்கிடையே, கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு துணை சபாநாயகர் 16 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார். சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். மேலும் அவர் சிவசேனா சட்டமன்றக் குழு தலைவராக அஜய் சவுத்ரி நியமிக்கப்பட்டதை ரத்துசெய்ய வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், துணை சபாநாயகரின் நோட்டீசுக்கு பதிலளிக்க ஜூலை 11-ம் தேதி வரை அவகாசம் வழங்கி இடைக்கால தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஜூலை 11-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனவும், அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் துரோகம் செய்தவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என மாநில அமைச்சரும் சிவசேனை தலைவருமான ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர முன்னேற்ற முன்னணி அரசு கவிழாது என எந்தளவுக்கு நம்பிக்கை உள்ளது என ஆதித்ய தாக்கரேவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறுகையில், நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லா அன்பும் எங்களுக்கு உள்ளது. துரோகம் செய்தவர்கள் வெற்றி பெறமாட்டார்கள். தப்பித்து ஓடியவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்” என்றார்.
இதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே அணியில் மகாராஷ்டிர அமைச்சர் உதய் சமந்த் இணைந்தது, சஞ்சய் ரௌத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது உள்ளிட்டவை பற்றி அவர் கூறியதாவது:-
அது (உதய் சமந்த்) அவருடைய முடிவு. ஆனால், அவர் எங்களிடம் ஒருநாள் வருவார். எங்களைப் பார்த்தே ஆக வேண்டும். பார்க்கலாம். இது அரசியல் அல்ல. தற்போது சர்கஸ் ஆகிவிட்டது. இங்கிருந்து சென்றவர்கள் தங்களைத் தாங்களே கிளர்ச்சியாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் கிளர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்றால், அதை இங்கிருந்தபடியே செய்ய வேண்டும். ராஜிநாமா செய்து தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். அவர்கள் என் கண் முன் அமர்ந்து என் கண்களைப் பார்த்து நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று சொன்னால்தான் இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.