இலங்கை அதிபருடன் அமெரிக்க உயர்மட்டக் குழு சந்திப்பு!

அமெரிக்காவின் உயர்மட்டக்குழு இன்று இலங்கை வந்தடைந்தது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா கடனுதவி, எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வரிசையில் அமெரிக்காவும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க உயர்மட்டக்குழு இன்று கொழும்பு வந்தடைந்தது. இதில் ஆசியாவுக்கான கருவூலத்துறை துணை உதவி செயலாளர் ராபர்ட் கப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை உதவி செயலாளர் கெல்லி கெய்டர்லிங் உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்நிலையில், அமெரிக்க உயர்மட்டக் குழுவினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இன்று சந்தித்தனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்தும், எதிர்காலத்தில் நிலையான வளர்ச்சிக்கு திட்டமிடுவது குறித்தும் விவாதித்தனர். மேலும், இலங்கையின் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து அமெரிக்க குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.