எருது வீடும் போட்டியில் சரிந்து விழுந்த ஸ்டேடியம்: 4 பேர் பலி!

எருது விடும் விழா நடைபெற்று வந்த சமயத்தில் திடீரென ஏற்பட்ட விபத்து தொடர்பான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நமது ஊரில் ஜனவரி மாதம் தொடங்கி, பல்வேறு ஊர்களிலும் தொடர்ச்சியாக நடைபெறும். இதில் இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பது வழக்கம். நமது ஊரில் எப்படி ஜல்லிக்கட்டு புகழ் பெற்றதோ, அதேபோல உலகின் பல நாடுகளிலும் எருது விடும் நிகழ்ச்சி புகழ் பெற்றது. இதைப் பார்க்கப் பலரும் ஸ்டேடியங்களுக்கு திரண்டு வருவார்கள். அப்படி தான் மத்திய கொலம்பியாவின் டோலிமா மாநிலத்தில் உள்ள எல்.எஸ்.பினல் நகரில் எருது விடும் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளைப் பார்த்து ரசிக்க அந்த ஸ்டேடியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் ஒன்று திரண்டு இருந்தனர். “கொரலேஜா” என்று அழைக்கப்படும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சியில், ​​காளைகள் உடன் விளையாடப் பொதுமக்களும் கூட போட்டி நடைபெறும் இடத்தில் நுழைவார்கள்.

இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போது எதிர்பாராத விதமாக அந்த ஸ்டேடியத்தின் மரத்தாலான ஸ்டாண்டுகள் அப்படியே இடிந்து விழுந்தது. சுமார் 800 பேர் அமர்ந்து இருந்த அந்த ஸ்டேண்டுகள் அப்படியே இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்தனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதில் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக ஸ்டாண்டுகள் இடிந்து விழுவது தெளிவாகப் பதிவாகி உள்ளது.

இதனை எஸ்பினல் மேயர் ஜுவான் கார்லோஸ் தமயோ உறுதி செய்துள்ளார். இடிந்து விழுந்த அந்த ஸ்டாண்டில் சுமார் 800 பேர் வரை அமர்ந்து இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கொடூர விபத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். அந்தக் குழந்தை பிறந்து வெறும் 18 மாதங்களே ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.