அசாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 135ஆக அதிகரிப்பு!

அசாம் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்து இருக்கிறது.

அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மழை-வெள்ளம் ஒருபுறம் இருக்க பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணி மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் விமானப் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை 2.17 லட்சம் பேர் மீட்கப்பட்டு 564 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மட்டும் 45.34 லட்சம் மக்கள் தத்தளித்து வருவதாகவும், கடும் பாதிப்புகளை சந்தித்து இருக்கும் பார்பட்டா மாவட்டத்தில் 10.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முக்கிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. கனமழை வெள்ளம் சூழ்ந்ததால் அசாம் மாநிலத்தில் 74,706 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்து இருக்கின்றன.

அசாமில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஆயிரக்கணக்கான வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விமானப்படை வீரர்கள் வான்வழியாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்கியும் இடிபாடுகளை பார்வையிட்டும் வருகின்றனர்.