பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழு மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் உள்பட 3 பேர் பலியாகினர்.
இளம்பிள்ளை வாத நோயை ஏற்படுத்தும் போலியோ வைரஸ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே இன்னமும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தானின் நடப்பு ஆண்டில் மட்டும் 8 சிறார்கள் போலியோவால் பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து எடுத்துகொள்ள மக்கள் அஞ்சுவதும், போலியோ மருந்து செலுத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காரணங்களால் பாகிஸ்தான் அரசுக்கு இந்நோய்த்தொற்றை ஒழிப்பது பெரும் சவாலான பணியாக பார்க்கப்படுகிறது. சில அடிப்படைவாத இயக்கங்களின் பொய் பிரசாரத்தால், போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணியில் தொய்வு ஏற்படுகிறது.
பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் மட்டும் 8 பேருக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டது உலக அளவில் கவலையை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நாடு முழுவதும் போலியோ தடுப்பு திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியது. இதன்படி, வீடு வீடாக போலியோ தடுப்பு மருந்து போட குழு அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சுமார் 4 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்துடன் பணியாளர்கள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின மாவட்டத்தில் போலியோ தடுப்புக் குழு மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கைபர் – பக்துன்க்வா மாகாண முதல் மந்திரி மெகமூத் கான், “குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். போலியோ குழு தாக்குதல் நடத்தியவர்கள் குழந்தைகளின் எதிரி” என்று தெரிவித்துள்ளார்.