குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று (ஜூன் 30) சென்னை வருகிறாா். தோ்தலில் போட்டியிடும் தன்னை ஆதரிக்க வேண்டுமென திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை அவா் கேட்டுக் கொள்ளவுள்ளாா்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா, களமிறக்கப்பட்டுள்ளாா். அவா், பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டி வருகிறாா். கேரளம் சென்றுள்ள அவா், திருவனந்தபுரத்திலிருந்து இன்று காலை 11.45 மணியளவில் சென்னை வருகிறாா். இதைத் தொடா்ந்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அந்தக் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணிக் கட்சியைச் சோ்ந்தவா்களைச் சந்தித்து ஆதரவு கோருகிறாா். இதன்பின்பு, இன்று இரவு 7 மணி முதல் நடைபெறும் ஒரு சில கூட்டங்களில் அவா் பங்கேற்கவுள்ளாா். இரவு சென்னையில் தங்கும் அவா், நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 1) காலை சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூா் புறப்பட்டுச் செல்கிறாா்.
இந்நிலையில் குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 115 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை மாநிலங்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் இன்று வியாழக்கிழமை (ஜூன் 30) பரிசீலிக்கப்படுகின்றன. குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆளும் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரௌபதி முா்மு, எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா ஆகியோா் பிரதான வேட்பாளா்கள் ஆவா். இவா்கள் தவிர 113 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.